அண்மைக்காலமாக சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய பொருளாதாரம், கரோனா காரணமாக மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி சீனா, சில இந்திய நிறுவனங்களில் பங்குகளை வாங்கியது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், அந்நிய முதலீடுகளுக்கான விதிமுறைகளை இந்தியா மாற்றியமைத்துள்ளது.
கரோனா காரணமாக இந்திய பங்கு சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும், தொழிற்சாலைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்த சூழலில் முக்கிய இந்திய நிறுவனங்களின் பங்குகளைக் குறைந்து விலைக்கு வாங்க சீனா முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த வாரம் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை, சீனாவின் மத்திய வங்கி வாங்கியது. இதற்குப் பிறகு இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது. எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலரும் சீனாவின் இந்த செயலை கண்டித்ததோடு, பல சீன நிறுவனங்களும் இதுபோன்ற திட்டத்தை கையில் வைத்துள்ளதால், அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து மத்திய அரசு இந்த விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, இனி சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் தற்போது, இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான சீனா, நேபாளம், இலங்கை, மியான்மார், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய 16 நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பதிவுசெய்து வைத்திருந்த நிலையில், இனி இந்த நிறுவனங்களும் மத்திய அரசின் அனுமதிக்கு பிறகே இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.