ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டுவருவதற்கான ஆய்வுகள் செய்யப்படும் என கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்துள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பெரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
அதன்படி, ஒருவர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களில் காவல்துறை விசாரணையை முடித்து, அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வகையில் புதிய சட்டம் ஆந்திராவில் இயற்றப்பட்டது. இதன் மூலம் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தூக்கிலிடப்படவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்துக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலரும் இந்த சட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதேபோன்ற ஒரு சட்டத்தை கேரளாவிலும் இயற்ற ஆய்வு செய்யப்படும் என கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரளாவிலும் சட்டம் இயற்றுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா மசோதாவை நாங்கள் ஆய்வு செய்வோம். அதில் என்ன விதமான அம்சங்கள் இருக்கின்றன, அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்வோம்" என தெரிவித்துள்ளார்.