அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அதானியை கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக வந்த ராகுல் காந்தி வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதானி குற்றச்சாட்டுகளை ஏற்கப் போகிறார் என்று நினைக்கிறீர்களா? வெளிப்படையாக, அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கப் போகிறார். நாங்கள் கூறியது போல் அவரைக் கைது செய்ய வேண்டும். சிறிய குற்றச்சாட்டுகளுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கௌதம் அதானி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருக்க வேண்டும், அரசு அவரை பாதுகாக்கிறது” என்று கூறினார்.