நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் நேற்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இது வெற்று பட்ஜெட் என்றும், மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று(1.2.2023) தாக்கல் செய்தது பட்ஜெட்டா? இது ஒரு மளிகைக் கடைக்காரரின் பில் போல் உள்ளது. ஒரு ஒழுங்கான பட்ஜெட் குறிக்கோள் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபியின் வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? அதன் வருவாய் விகிதம் என்ன? என்பதைக் கூற வேண்டும். அத்துடன் பொருளாதார வளர்ச்சி, வளங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.