ஆபாசப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தன்னிச்சையாக பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆபாசப் படம் பார்ப்பதைத் தடுப்பதற்குப் பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது. அதிலும் பிரதானமாக குழந்தை-சிறார்கள் குறித்தான தடைசெய்யப்பட்ட வீடியோக்களை தடுப்பதற்கு தனிக் கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும், பொதுவில், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு ஆபாசப் படங்கள் தான் காரணம் என்ற கருத்தும் உலாவி வருகிறது. இந்த நிலையில் தான், ட்விட்டர் சிஇஒ. வாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர், ட்விட்டரில் குழந்தைகள் சார்ந்த ஆபாசப் படங்கள் இருந்தால் அனைத்தும் நீக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு, 2022 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை 52,141 கணக்குகளையும் நீக்கினார். இந்த நிலைமையில் தான், கேரளா உயர்நீதி மன்றம், ஆபாசப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் தன்னிச்சையாக பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என தெரிவித்துள்ளது.
இந்த கருத்து வருவதற்கு காரணம். 2016ஆம் ஆண்டு ஆலுவா அரண்மனை சாலை அருகே மொபைலில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாக 33 வயது நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இதிலிருந்து தன்னை விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்த நீதிபதி பி.வி குன்ஹிகிருஷ்ணன், ஒரு நபர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச வீடியோவை மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் பார்ப்பது குற்றமாகுமா? இது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். மேலும், இதனை குற்றச் செயல் என சொல்வது, அவரின் தனியுரிமையை மீறுவதாக இருக்கும். ஆகையால், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292ல் வழக்கு பதிய செய்ய முடியாது. எனவே, இவர் மீதுள்ள வழக்கும், அது தொடர்பாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறேன் என தீர்ப்பளித்தார்.
மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவேளை ஆபாசமான வீடியோ அல்லது புகைப்படங்களை பரப்பவோ, விநியோகிக்கவோ, பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால், பிரிவு 292 ஐபிசியின் கீழ் குற்றமாக கருதப்படும். பெற்றோர்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். செல்போன் சற்று ஆபத்தான பின்னணியை கொண்டதுதான். இருந்தும், உங்கள் எதிரில் அவர்கள் நல்ல பயனுள்ள தகவல்களை பார்க்க அனுமதிக்கலாம். தற்போது அனைத்து மொபைல் போன்களிலும் எளிதில் அணுகக்கிடைக்கும் ஆபாச வீடியோக்களை மைனர் குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் இது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.