Skip to main content

“புதுச்சேரிக்கு பாஜகவின் வற்புறுத்தலால் புதிய மதுபான ஆலை” - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

 

dmk siva alleges New liquor factory in Puducherry due to BJP’s insistence

புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, “தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தமது இறுதி மூச்சுவரை பாடுபட்ட  கலைஞருக்கு புதுச்சேரி அரசு சிலையும், மணிமண்டபமும் அமைக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பட்ஜெட் கூட்டத்தில் இன்றைய கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி கலைஞருக்கு ஏன் சிலை அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடியாமல் போனது என்றும், ஏதாவது ஒரு இடத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று பதிலளித்துள்ளார். ஆனால் வரும் காலத்தில் கண்டிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவோம்.

குலக்கல்வியை திணிக்கும் 14 வகை பாடப்பிரிவுகள் 2028க்குள் அனைத்து அரசுப் பள்ளியிலும் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்–சின் கொள்கையை பகிரங்கமாக சபையில் அமைச்சர் பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு தொடர்ந்து ஆர்எஸ்எஸ்–சின் கொள்கையை திணித்து புதுச்சேரி மக்களுக்கும், மாணவர்களுக்கும் துரோகம் இழைப்பதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். புதுச்சேரி விமான நிலைய வரிவாக்கம் உள்ளிட்ட புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக முதல்வர் ரங்கசாமி தமிழ்நாடு முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தால் நிச்சயமாக எங்கள் தலைவர் புதுச்சேரி மக்களுக்காக கண்டிப்பாக செய்து கொடுப்பார், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

புதுச்சேரிக்கு புதிய மதுபான ஆலை தேவையற்றது. ஏற்கனவே இருக்கும் மதுபான ஆலைகளால் எந்த பயனும் இல்லை. இதனால் 750 ஏக்கர் நிலப்பரப்பு வீணாகிறது. முதல்வர் சொன்னபடி வேலைவாய்ப்பும் இதில் கிடைக்காது. முதல்வர் சொன்ன ரூ. 500 கோடி வருமானமும் வராது. இதனால் எந்த வகையிலும் புதுச்சேரிக்கு வருமானம் வராது. முன்னாள் துணைநிலை ஆளுநர் மற்றும் பாஜக–வின் வற்புறுத்தலுக்காக புதிய மதுபான ஆலைக்கு அனுமதிக்கிறார்கள். சின்னஞ்சிறு மாநில புதுச்சேரிக்கு இதுபோன்ற மதுபான ஆலைகள் கேடு. திமுக இதை ஒருபோதும் வரவேற்காது.

முன்னாள் அமைச்சர் சகோதரி சந்திர பிரியங்கா ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தும், புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுவார்கள் என்பதை படிப்படியாக சுட்டிக்காட்டி அவையின் கவனத்தை ஈர்த்துள்ளார். இது புதுச்சேரி மக்களுக்கு ஏற்புடைய கருத்து. அவரை திமுக மனதார பாராட்டுகிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்