
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திட்டமிட்டபடி அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் போனது. 9 நாள் ஆய்வுக்காக சென்ற அவர்கள், 9 மாதங்களாக இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் கடந்த 15ஆம் தேதி விண்ணில் பாய்ந்தது. அவர்கள், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுனிதா வில்லியம்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலுக்குப் பிறகு, நான் உங்களுக்கு கடிதம் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. உங்கள் சாதனையை கண்டு 140 கோடி இந்திய மக்களும் பெருமைப்படுகிறார்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் மீண்டும் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.
உங்களது தாய், நீங்கள் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். மறைந்த உங்கள் அப்பாவின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த போது உங்களை சந்தித்ததை அன்பாக நினைவில் வைத்திருக்கிறேன். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை இந்தியா வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.