கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அன்றைய கேரளா நிதியமைச்சர் பாலகோபால் பங்கேற்றார்.
அங்கு, நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நிதியமைச்சர் பாலகோபால், கைகுலுக்கி பரிசுகளை வழங்கி வந்தார். அந்த வகையில், அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிக்கும் கைக்குலுக்கி பரிசை வழங்கினார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இஸ்லாமியப் பெண்ணுக்கு, வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவர் கை கொடுப்பது என்பது ஷரியத் சட்டத்திற்கும், இஸ்லாமிய மத நம்பிக்கைக்கும் எதிரானது என்று கூறி மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல் நவ்ஷாத் என்பவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து அந்த இஸ்லாமிய மாணவி, அப்துல் நவ்ஷாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘அப்துல் நவ்ஷாத் தனக்கு எதிராக பதிவிட்ட வீடியோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், அப்துல் நவ்ஷாத் மீது சட்டவிரோத வழியில் கலவரத்தைத் தூண்டுதல், பொது இடங்களில் பெண்களின் கண்ணியத்தை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அப்துல் நவ்ஷாத் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வு முன்பு வந்தது. அப்போது அவர், ‘கைகுலுக்கல் என்பது வாழ்த்துதல், மரியாதை, உடன்பாடு, ஒப்பந்தம், நட்பு, ஒற்றுமை போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய சைகை. அத்தகைய சூழ்நிலைகளில், நமது அரசியலமைப்பு அந்த பெண்ணின் நலனைப் பாதுகாக்கும். மேலும், இந்த சமூகம் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட மேலானது அல்ல. அரசியலமைப்பு மிக உயர்ந்தது.
மத நம்பிக்கைகள் தனிப்பட்டவை. குறிப்பாக இஸ்லாம் மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு நபரின் மத நடைமுறையைப் பின்பற்ற மற்றவரை கட்டாயப்படுத்த முடியாது. மத நடைமுறை என்பது ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட விருப்பமாகும். எனவே, பெண் தனது வழியில் ஒரு மத நடைமுறையைப் பின்பற்ற உரிமை உண்டு. மத நம்பிக்கையை ஒருவர் மீது திணிக்க முடியாது’ என்று கூறி அப்துல் நவ்ஷாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.