பாகிஸ்தானுடன் கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்கில் போரின் 25வது வெற்றி தினக் கொண்டாட்டம் வெள்ளி விழாவாக நாடு முழுவதும் இன்று (26.07.2024) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 4.1 கி.மீ. நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கார்கில் வெற்றி தினம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கார்கில் வெற்றி தினம் நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999ஆம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரதமாதாவை பாதுகாக்கும் போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவரது தியாகம் மற்றும் வீரத்தால் அனைத்து நாட்டு மக்களும் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.ஜெய் ஹிந்த்! இந்தியாவுக்கு வெற்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.