உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் கோவிந்தராஜர் சுவாமி கோவில் வளாகத்தின் முன்னே இருந்த மரம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிந்தராஜர் சுவாமி ஆலயத்தில் தற்பொழுது வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. இதில் கோவிந்தராஜர் சுவாமி கோவிலில் இருந்த சுமார் 500 ஆண்டுகள் பழமையான அரசமரம் இரண்டாகப் பிளந்து கொண்டு பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
மரத்தடியிலிருந்த பக்தர்கள் அனைவரும் தெறித்து ஓடிய நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் மரத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் அதில் 3 பேர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.