பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புதிய வரைபடம் ‘அரசியல் அபத்தம்’ என இந்தியா சாடியுள்ளது.
இந்திய எல்லைப்பகுதிகளைச் சீனாவும், நேபாளமும் ஏற்கனவே சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டார். அதில், ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்றும், சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத் பாகிஸ்தானுடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியப் பகுதிகள் சிலவற்றை தங்களுக்கு சொந்தமானது எனப் பாகிஸ்தான் உரிமைகோருவதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த புதிய வரைபடம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "பாகிஸ்தானின் அரசியல் வரைபடம் என அழைக்கப்படும் ஒன்றை பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ளதை பார்த்தோம். இது அரசியல் அபத்தம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற உரிமைகோரல்கள். குஜராத்தின் ஒரு பகுதி, ஜம்மு காஷ்மீர், லடாக்கை இணைக்கும் அவர்கள் செயல் ஆகியவை சட்டரீதியாகவோ, சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானதாகவோ இல்லை. இது முட்டாள்தனமானது. பாகிஸ்தானின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.