Skip to main content

மனைவியைக் கும்பமேளாவிற்கு அழைத்துச் சென்ற கணவர்; மகனிடம் நாடகமாடி நிகழ்த்திய கொடூரம்!

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

Husband invites wife to Kumbh Mela and performs cruel act in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

அந்த வகையில், மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண், தன் கணவரால் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, மீனாட்சி என்பவருடைய புகைப்படத்தை பிரயாக்ராஜ் பகுதியில் காட்டி அவருடைய மகன் அவரை தேடி வந்துள்ளார். இதையடுத்து, அந்த புகைப்படத்தை போலீசிடம் காட்டி தனது தாய் மாயமாகிவிட்டதாக புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தீவிரமாக வந்துள்ளனர். 

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு நடத்தியதில், மீனாட்சி தனது கணவர் அசோக் பால்மிகியுடன் லாட்ஜ் ஒன்றுக்கு போல் இருந்துள்ளது. அதன்படி, அந்த லாட்ஜுக்குள் போலீசார் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த லாட்ஜில், மீனாட்சியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அசோக் பால்மிகியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அசோக் பால்மிகிக்கு, வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் அசோக்குக்கும், மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அசோக், தனது மீனாட்சியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடலாம் என்று கூறி தனது மனைவியை அழைத்துள்ளார். இதனை நம்பிய மீனாட்சியும், தனது கணவரோடு பிரயாக்ராஜுக்கு வந்துள்ளார்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிறகு, அங்கு அசோக் தனது மனைவியோடு எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அன்றைய இரவு, லாட்ஜ் ஒன்றை புக் செய்து தனது மனைவியோடு அசோக் அங்கு தங்கியுள்ளார். அங்கு, தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் பின்னர், மீனாட்சி மகா கும்பமேளாவில் தொலைந்துவிட்டதாகக் கூறி தனது மகனை ஏமாற்றி நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அசோக் பால்மிகியை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்