கேரளாவில் கோவில் அருகே சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட சிறுவனை உறவினர் ஒருவரே காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்குமார்-ஷீபா தம்பதியினர். அருண்குமார் ஆசிரியராகவும், ஷீபா கேரள தலைமைச் செயலகத்தில் அலுவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆதிசேகர் என்ற 15 வயது மகன் இருந்தான். பத்தாம் வகுப்பு படித்து வந்த ஆதிசேகர் கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை ஐந்து மணியளவில் வீட்டை ஒட்டிய சாலையில் சக நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது நின்றிருந்த கார் ஒன்று திடீரென புறப்பட்டு சிறுவன் ஆதிசேகர் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
சிறுவன் மீது மோதிய காரை ஓட்டியது சிறுவனின் தூரத்து உறவினரான பிரியரஞ்சன் என்பது தெரிய வந்தது. காரை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு பிரியரஞ்சன் ஓடிவிட்டார். இதுதொடர்பாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது நடந்தது விபத்தல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பது தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சியில் சைக்கிளில் வீடு திரும்ப காத்திருந்த சிறுவன் ஆதிசேகர், சாலையின் நடுப்பகுதிக்கு வரும் வரை திட்டமிட்டு சுமார் 15 நிமிடம் காத்திருந்து காரால் மோதியது தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பிரியரஞ்சன் கோவில் அருகே சிறுநீர் கழித்ததாகவும் அதனை சிறுவனாகிய ஆதிசேகர் தட்டிக் கேட்டதும் தெரிய வந்தது. இந்த ஆத்திரத்தில் சிறுவன் மீது கார் ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தற்போது தலைமறைவாக இருந்த பிரியரஞ்சனை கைது செய்துள்ளனர்.