
கடந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு, பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தப்படும். 2025 ஆண்டின் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (24-02-25) ‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “கல்வியும் மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளப்படுத்தவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடியேற்றி உரையாற்றிய போது, ஜெனிட்டிஸ்க் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகம் திறக்கப்படும் என்று தெரிவித்தேன். அந்த அறிவிப்பு, இன்று செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நமது அரசு, சாதாரண சாமானியர்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகம் திட்டம்.
மக்கள் மீதான் பொருளாதார சுமையை குறைக்கவே இந்த முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். இந்த மருந்தகங்களைத் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட மருந்துக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களுக்கு 48 நேரத்தில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். முதல்வர் மருந்தகம் சிறப்பாக பயன்படும் வகையில், மருந்தாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், டி.பார்ம், பி.பார்ம் படித்த 1,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது. இந்த மருந்தகம் மூலம், பொதுமக்களுக்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மருந்தகங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களில் வாங்கி பயன்பெற முடியும்.
நாம் ஆட்சிக்கு வந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். இந்த அடிப்படையில் உருவானது தான் மக்களைத் தேடி மருத்துவ திட்டம். ஒவ்வொரு திட்டமும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இந்த அணுகுமுறையால் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று நமக்கு நாமே வாசிக்கிற பாராட்டு இல்லை. இதெல்லாம் ஒன்றிய அரசினுடைய நிதி ஆயோக் புள்ளிவிவரம் சொல்கிறது. ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்கு மத்தியில் அதைப்பற்றி கவலைப்படாமல் தமிழ்நாடு மக்களுடைய நலனை மட்டுமே கவனத்தில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பது இல்லை. முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்ட நோக்கம் சிதையாமல் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.