ஆந்திர பிரதேச மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அம்மாநில தலைநகர் அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஜெகன்மோகன் பதவியேற்று நடைப்பெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் ஆகும். அந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதனையடுத்து முதியோர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ 2000- லிருந்து ரூபாய் 2,250 ஆக அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறையில் ஒப்பந்த முறையில் ஊழியர்களாக பணியாற்றும் 'ஆஷா' ஊழியர்களின் மாத ஊதியத்தை ரூபாய் 3000-த்தில் இருந்து ரூபாய் 10,000 ஆக உயர்த்துவது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெள்ளியாகியுள்ளது. 'ஒய்.எஸ்.ஆர் பரோசா' என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 12,500 வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
கல்வி மற்றும் இளைஞர்கள் நலன், வேலை வாய்ப்பு குறித்தும் முதல்வர் ஜெகன் அமைச்சர்களுடன் ஆலோசித்தார். அதே போல் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில பேருந்து போக்குவரத்து கழகத்தை (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) அரசுத்துறையாக மாற்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்து முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். மேலும் குழுவின் அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.