இஸ்லாமிய இளைஞரை தாக்க முயன்ற இந்து அமைப்பினரிடம் இருந்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரிக்கு இந்துத்வ அமைப்புகளிடம் இருந்து கொலைமிரட்டல்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர்காண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் உள்ளது கிரிஜா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இந்து கோவிலுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்க்க வந்த இஸ்லாமிய இளைஞருடன் சேர்ந்து அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை அந்தக் கோவிலுக்குள் இருந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென கூட்டமாகக் கூடி அந்த இளைஞரை தாக்கத்தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், இளைஞரைத் தாக்க முயன்ற கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
கும்பலிடம் சிக்கிக்கொண்ட இளைஞரை காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்கத் தொடங்கியதும் அவரைக் கட்டியணைத்து தன்னோடு பாதுகாப்பாக இழுத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை உயிருடன் மீட்ட ககன்தீப் சிங் கூடிய விரைவில் பிரபலமடைந்தார்.
இளைஞரை ககன்தீப் சிங் இந்துத்வ அமைப்பிடம் இருந்து காப்பாற்றும் காட்சி
இந்நிலையில், இஸ்லாமிய இளைஞரைக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரிக்கு சில இந்துத்வ அமைப்புகள் கொலைமிரட்டல் விடுப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ககன்தீப் சிங், நான் இப்போது விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக என் நண்பர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.