புதுச்சேரியில் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டி கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்தும் மற்றும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பெண் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 60 குழுக்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக கேரள காவல்துறை, தமிழ்நாடு ஃபுட் கார்ப்பரேஷன், தீயணைப்புதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று முதல்நாள் ஆட்டத்தில் கேரளா போலீசார் மற்றும் தமிழக அணியும் விளையாடியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியின் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.