உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (20-10-23) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரிடம் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 18வது லீக் ஆட்டமான நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தன. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கங்களை எழுப்பி வந்தார். இதனை பார்த்த அங்கிருந்த போலீஸார் ஒருவர் அவரிடம் வந்து, ‘மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தான் எழுப்ப வேண்டும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது’ என்றும் கூறினார். இதில், அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர், “பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த காவலர், ‘இந்தியாவுக்கு ஆதரவான எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பக் கூடாது என்று கூறினார். இதில், இருவருக்கும் மைதானத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போட்டி அமைப்பாளர்கள் அங்கு வந்து அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.