
2026ஆம் ஆண்டுக்குப் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்துத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளச் சென்னையில் மார்ச் 22ஆம் தேதி (22.03.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இக்கடிதம் இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களைத் தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.அந்த வகையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாகச் சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (19.03.2025) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். அப்துல்லா, கனிமொழி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் நிச்சயமாகக் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் 8 மாநிலங்களின் தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு நிச்சயம் செவி சாய்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் 1976ஆம் ஆண்டு அன்றைய பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி 25 ஆண்டுக் காலத்திற்கு 543 என்ற எண்ணிக்கையிலான தொகுதிகள் கூடுவதை ஒத்திவைத்தார்.

இது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 42இன் படி கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஜ்பாய் 2021ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 25 ஆண்டுக் காலத்திற்குத் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்தார். இதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு 50 ஆண்டுக்கால விலக்கு கிடைத்திருந்தது. இன்னும் கூடுதலாக 25 இலிருந்து 30 ஆண்டுக் காலம் விலக்கு கிடைத்தால் தான் இந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும்” எனப் பேசினார்.