
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு 8 நாள் இருந்து ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னர் திரும்பிட திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர்கள் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கியிருந்தனர். பல்வேறு இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் இன்று (19.03.2025) அதிகாலை பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் உரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “விண்வெளியில் உள்ள ஐ.எஸ். எஸ். (I.S.S) எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஃபால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச்சும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். அவர்கள் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ்க்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.