Skip to main content

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; திமுக எம்.பி.க்கள் சரமாரி கேள்வி!

Published on 19/03/2025 | Edited on 19/03/2025

 

Budget session of Parliament; DMK MPs ask questions

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி (10.03.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் இன்று (19.03.2025)பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படி திமுக பொருளாளரான டி. ஆர். பாலு எம்.பி., “திருச்சி ரயில்வே பிரிவின் முக்கிய தலைமையகமாக இருந்தபோதும் இரண்டு ரயில்கள் மட்டுமே அங்கிருந்து புறப்படுகின்றன. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு பிறகு இதுவரை வேறு புதிய சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்சேவைகள் தொடங்கப்படாதது ஏன்?. இந்த இரண்டு ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதாவது இரயில்வே அமைச்சகம் அறிந்திருக்கிறதா?.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான திருச்சியை ரயில்வே புறக்கணிப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும். திருச்சிக்கும் எழும்பூருக்கும் இடையில் முன்னர் இயக்கப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் நீண்ட கால கோரிக்கையை கருத்தில் கொண்டு மீண்டும் இயக்க வேண்டும்” எனவும் கேட்டுள்ளார். வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், “நாட்டில் போலிச் செய்திகளும் அதனால் பல அச்சுறுத்தல்களும் பெருகி வருவதால் பொது அமைதி குலைகின்றது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக அவற்றை சமாளிக்கவும் தடுக்கவும் ஒன்றிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.,“சைபர் பாதுகாப்பு நிறுவனமான எம்சிஅப்பி ( McAfee) நடத்திய கணக்கெடுப்பின்படி 75% இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகையான போலியான செய்திகளையும் படங்களையும் பார்க்கின்றனர். குறைந்தது 38 சதவீதத்தினர் போலிபடங்கள் மற்றும் காணொளி மோசடிக்கு இலக்காகியுள்ளனர் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா?. இணையத்தில் உள்ள டீப்பேக் கண்டண்ட் (deepfake content) எனப்படும் போலியான செய்திகள் மற்றும் மோசடிகள் தொடர்பான பிரச்சினைகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? போலிகளை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்குத் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அவற்றை கல்வித் திட்டங்களிலும் சேர்க்க வேண்டும். மேலும் இதற்கான முறையான சட்டத்திட்டங்களையும் அரசு உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., “பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வலைத்தளங்கள் சுதந்திரமாக செயல்பட அண்மை காலமாக மிகுந்த தடைகள் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநில வாரியாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகளின் வலைத்தளங்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். தடை உத்தரவு மற்றும் அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா? .மக்களாட்சியில் பத்திரிகை சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக பல நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கான காரணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்