தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறி மெதுவாக நகர்ந்து ஒடிஸாவை நோக்கி செல்கிறது. மிக தீவிர புயலான இது அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று எனவும், இது தமிழகத்தில் கரையை கடக்கலாம் எனவும் முதலில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பின்னர் காற்றின் திசை மாறி தற்போது ஒடிஸாவை நோக்கி இந்த புயல் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஃபானி புயல் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே மே 3ம் தேதி கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கரையை கடக்கும் போது 175-185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதிகப்பட்சமாக 205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு படைகள், அரசு அமைப்புகள் புயலை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா சந்தித்த புயல்களிலேயே மிகப்பெரிதாக ஒன்றாக இது இருக்கக்கூடும் என்பதால் ஒடிசா மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.