Skip to main content

டெல்லி மருத்துவமனை உரிமையாளருக்கு போலீஸ் காவல்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Delhi hospital owner police custody

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று முன்தினம் (25.05.2024) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் படுகாயம் காயமடைந்த மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் குழு மற்றும் போலீஸ் டிசிபி ஷஹ்தரா சுரேந்திர சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். 

Delhi hospital owner police custody
நவீன் கிச்சி

இதனையடுத்து மருத்துவமனையின் உரிமையாளர் நவின் கிச்சி என்பவரும், டாக்டர் ஆகாஷ் என்பவரையும் டெல்லி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருந்தனர். இதில் நவின் கிச்சி மருத்துவமனை தொடங்கிய போதே இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி மற்றும் டாக்டர் ஆகாஷ் ஆகியோர் இன்று (27.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும்  மே 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் இருவரும் விவேக் விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

சார்ந்த செய்திகள்