கடந்த 10 ஆம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டார்.
இதனை கண்டித்து அம்மாநில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மேற்குவங்க முதல்வர் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் சார்பில் தலா 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்களைத் தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்ததை அடுத்து, அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மேற்கு வங்க மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.