தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவை எட்டியுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், காற்று மண்டலத்தில் நச்சுப் பொருட்களின் அளவு இன்று காலை முதல் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 32 ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனிடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 07.00 மணியளவில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறவுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் அனைவரும் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இரு அணியை சேர்ந்த வீரர்களும் சுவாச கவசம் அணிந்தப்படி விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதல் டி20 போட்டி ரத்தாக வாய்ப்பு. டெல்லியின் 9 இடங்களில் இன்று காற்றின் தரக்குறியீடு 900 புள்ளிகளைத் தாண்டியது. பவானா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 999ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. காற்றின் மாசை குறைக்கும் வகையில் டேங்கர் லாரிகள் மூலம் சாலைகளில் ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகின்றன.