தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்கள், சாலைகள், வடிகால்களைச் சீரமைப்பு செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (16.11.2021) தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ''வெள்ளச் சேதம் குறித்து பிரதமரைச் சந்தித்து நிதி கோரிக்கை வைப்போம்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி நிவாரணம் வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ‘நவ. 8 முதல் 11ஆம் தேதிவரை வழக்கத்தைவிட 49.6 சதவீதம் மழைபெய்துள்ளது. வெள்ளத்தால் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைவெள்ள நிவாரணமாக ரூபாய் 2,079 கோடி வழங்க வேண்டும். அதிலும் 550 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, “வெள்ளத்தால் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர். நிவாரணமாக ரூபாய் 2,079 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். உடனடியாக 550 கோடியை விடுவிக்க வேண்டும். மொத்தமாக 2,600 கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று உடனடியாக 6 பேர் கொண்ட மத்தியக் குழு மழை வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வர உள்ளது. ஆய்வு செய்து சேதங்களைக் கணக்கிட்ட பிறகு கண்டிப்பாக நிவாரணம் அளிக்கப்படும் என்றார். முதல்வரிடமும் தொலைபேசியில் பேசினார். 6 பேர் கொண்ட குழு எங்கெல்லாம் ஆராயும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரியவரும். இன்று மாலை அவர்கள் தமிழகம் வர உள்ளார்கள்'' என்றார்.