
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 7 வருடங்களுக்கு முன்பு கலிக்கம்பட்டி ஊராட்சியில் சின்னாளபட்டியிலிருந்து கலிக்கம்பட்டி செல்லும் சாலையிலிருந்து சேரன் பள்ளி வழியாக கலைமகள் காலணிக்கு செல்லும் சாலை மற்றும் கலைமகள் காலணி முதல் கோட்டைப்பட்டி வரை செல்லும் சாலை, கலிக்கம்பட்டி முதல் முன்னிலைகோட்டை வரை செல்லும் சாலை இதுதவிர ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்து நகர் முதல் ஆலமரத்துப்பட்டிக்கு செல்லும் சாலை உட்பட 20க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டன. இவற்றில் ஒருசில சாலைகள் கிராமப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மூலமும் போடப்பட்டன.

இந்த சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதோடு 10அடி அகலம் உள்ள சாலை 5அடி அகலம் உள்ள சாலையாக மாறி அவ்வழியே செல்லும் பொதுமக்களை விபத்துக்கு உள்ளாக்கி வருகின்றன. முன்னிலைக் கோட்டையில் இருந்து கலிக்கம்பட்டிக்கு வரும் சாலை, கலிக்கம்பட்டியில் இருந்து சேரன் பள்ளிக்கு வரும் சாலை, இதுதவிர கலைமகள் காலனியில் இருந்து சேரன் பள்ளிக்கு வரும் தார்ச்சாலை அனைத்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இரு சக்கர வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் நிலைமை உள்ளது.

இதுதவிர தங்கள் பிள்ளைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்ல வரும் பெற்றோர்கள் சாலைகளில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரும் சாலையை புதுப்பித்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேரன் பள்ளியைச் சேர்ந்த மாணவ- மாணவியர்கள் கிஷோர் மற்றும் சங்கரி கூறும்போது, “தினசரி காலை மாலை இரு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் நாங்கள் பள்ளிக்கு வரும்போது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் இடறி கீழே விழந்து செல்கிறோம் அதுபோல் சேரன் பள்ளிக்கு வரும் தார்ச்சாலையில் சைக்கிளை ஓட்டிச் சென்றாலே சைக்கிள் பஞ்சராகி விடுகிறது. சின்னாளபட்டியைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டிற்கு நடந்து செல்லும்போது சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்களால் காயங்களுடன் செல்லும் நிலைமை உள்ளது. அமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வரும் சாலையை புதுப்பித்துத் தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
சேரன் பள்ளியில் படிக்கும் சுமார் 2ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அமைச்சர் பெரியசாமி தங்கள் பள்ளிக்கு வரும் சாலையை புதுப்பித்து தருவார் எனப் பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.