விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறாக பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயக்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை, நியாயமான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்திய விவசாயிகள் சபை மற்றும் ராஷ்டிரிய கிஷான் மகா சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பால், காய்கறிகள் மற்றும் விவசாயப் பொருட்களின் விநியோகத்தை விவசாயிகள் மாநிலம் முழுவதும் நிறுத்தி வைத்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், ‘விவசாய சங்கங்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் உறுப்பினர்கள் அங்கமாக இருப்பது சகஜம்தான். அவர்கள் வழக்கத்திற்கு மாறான விஷயங்களைச் செய்து ஊடக வெளிச்சத்தைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கும்போது, சில ஆயிரம்பேர் மட்டுமே போராட்டம் நடத்துவது தொடர்பற்றதாக இருக்கிறது’ என சர்ச்சைக்குரிய விதிமாக பேசியிருந்தார்.
விவசாயத்துறை அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.