
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூரில் அமைந்துள்ள அஞ்சனாச்சி அம்மன் சமேத மணிகண்டேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
அப்பொழுது அங்கு இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் கோபுர வேலை நடைபெற்று வருகிறது. இதனால் கோபுரத்தைச் சுற்றி தென்னங்கீற்றால் தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது. இந்தத் தடுப்புகளின் மீது பட்டாசு தீப்பொறி பட்டு முழுவதும் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோவில் திருவிழாவின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்து காவல்துறையினர் தீயினை அணைத்தனர். கோவிலின் தேரோட்டத்தின் போது தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.