பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அப்போது ரயில்வே பணிநியமனத்தின் போது பீகாரில் நிலங்களை வாங்கிக் கொண்டு பலருக்கு பணிநியமனம் செய்ததாகக் கூறி லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 15 ஆம் தேதிக்குள் அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே லாலு பிரசாத்தின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தற்போது தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அவரது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.