
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா என்பவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கடந்த 2024 ஆண்டு ஜூலை மாதம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அதன்பிறகு லக்னோ திரும்பும் போது வழியில் தனது ஷூவை தைப்பதற்காக விதாயக் நகரில் இருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சைத் என்பவரின் கடைக்குச் சென்றார். அங்கு ராம்சைத்துடன் சேர்ந்து செருப்பு தைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.
பின்பு செருப்பு தைக்கும் தொழிலாளியின் குடும்பம், தொழில் விவரம், தேவைகள் என அனைத்து குறித்தும் விசாரித்துவிட்டு பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதன்பிறகு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்களுக்காக தான் தைத்த செருப்புகளை ராம்சைத் பரிசாக வழங்கினார்.

இதனிடையே அண்மையில் ராம்சைத்தை மும்பைக்கு அழைத்துச் சென்ற ராகுல் காந்தி, அவருக்கு பிரபல தோல் நிறுவன தொழிலதிபரான சுதீர் ராஜ்பர் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு சுதீர் ராஜ்பர், ராம்சைத்திற்கு தொழில் ரகசியத்தையும், வணிக நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
பின்னர் ராகுல் காந்தி மற்றும் சுதீர் ராஜ்பர் இருவரின் உதவியுடன் தற்போது ‘ராம்சைத் மோச்சி’ என்ற புதிய காலணி பிராண்ட் ஒன்றைத் தொடங்கவுள்ளார். அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ள ராம்சைத் ராகுல் காந்தியின் தொடர் உதவியின் காரணமாகவே இது சாத்தியமானது என்று நினைவு கூர்ந்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் ராம்சைத்திற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.