நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
ஆந்திராவின் அமராவதி, விஜயவாடா, குண்டூர் உள்ளிட பல பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு முகாம் அமைத்து உதவி செய்து வருவதோடு ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. பல பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதோடு நிவாரணம் வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் அமைந்துள்ள தலைமைச் செயலக சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பீகார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பீகாரில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் தொடர்ச்சியாக இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.