குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலை, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ மருத்துவமனையிலிருந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அங்கு கடந்த 30 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார்.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிகிச்சை முடிந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், உடல்நலம் பெற வாழ்த்தியவர்கள், பிரார்த்தித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.