கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் மே 10ம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் எனும் நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்தனர். ஒவ்வொரு கட்சியினரும் புதுவிதமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊர்வலமாகச் சென்றும் பிரதமர் மோடி 10 கிலோமீட்டர் தூரம் வரை திறந்த வாகனத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெலிவரி பாய் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார். பாஜகவிற்காக அகில இந்திய பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில பாஜக தலைவர்கள் என அனைவரும் கர்நாடகத்தில் பிரச்சாரத்தில் குதித்தனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் முதல் தலைமுறை வாக்காளர்களை கவரவும் மக்கள் கண்டிப்பாக வாக்கு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஹோட்டல் கடை உரிமையாளர் ஒருவர் அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் முதல் முறை வாக்காளர்கள் கையில் மையுடன் வந்தால் பட்டர் தோசை, மைசூர் பாகு, ஜூஸ், சினிமா டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 2018-19 தேர்தல்களிலும் அதே ஹோட்டல் கடை உரிமையாளர் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு அதனைச் செயல்படுத்திக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.