பாபா ராம்தேவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர்,
‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.
கடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கு நான் ஆதரவு தெரிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டேன். அப்போது இருந்த நிலைமை வேறு. இப்போது உள்ள நிலைமை வேறு.
மோடி அரசின் கொள்கைகளில் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.
நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சனைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை. நான் பணத்தை தேடி ஓடியது இல்லை. அதுவே என்னை தேடி வருகிறது.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.