அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் வழங்குவதைத் தடுக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாய் சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நடைபெற்றது. அப்போது, மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதைத் தடுக்க முடியாது என்ற பரிந்துரைதான் அதிகம் கிடைத்துள்ளதாகக் கூறினார். அதேவேளையில், இலவசங்கள் என்பது என்ன என்பதை வரையறுக்க வேண்டும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசக் கல்வி சில குறிப்பிட்ட அளவில் இலவச மின்சாரம் ஆகியவை வழங்குவதைக் கூட, இலவச அறிவிப்புகளாகதான் கருத வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவைக் குறித்ததெல்லாம் விரிவான விவாதம் நடத்திய பின்னரே, முடிவெடுக்க முடியும் என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி வழங்குவதை நாங்கள் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் மனுவை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் தங்கள் பரிந்துரைகளை வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடமும் ஒரு நகலை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.