Skip to main content

"பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா" - அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

narendra modi

 

'எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு' என்ற ஊடகவியலாளர் அமைப்பு, வருடந்தோறும் ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை சுதந்திரம் எந்தளவில் உள்ளது என்பது குறித்த அறிக்கையையும், அதுதொடர்பான பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்தாண்டும் அவ்வாறான பட்டியலையும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. உலகில் அதிக பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில், தொடந்து ஐந்தாவது வருடமாக நார்வே முதலிடம் வகிக்கிறது. பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 180 நாடுகளில் 73 சதவீத நாடுகள், பத்திரிகை சுதந்திரத்தை முழுவதுமாகவோ அல்லது பாதியளவிற்கோ முடக்கிவுள்ளன என அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசையில் இந்தியா 142 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவை மோசம் என வகைப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எல்லாவிதமான தாக்குதலுக்கும் உள்ளாவதாக தெரிவித்துள்ளது.

 

எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து கூறியுள்ளதாவது;


பிரதமர் மோடி, ஊடகத்தின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் நான்கு பத்திரிகையாளர்கள், அவர்களது வேலை சம்பந்தமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தனது வேலையைச் சரியாகச் செய்ய முயலும் பத்திரிகையாளர்களுக்கு உலகின் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

 

அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், தேசவிரோதி என முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்தியப் பத்திரிகையாளர்கள் எல்லாவிதமான தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். இதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான போலீஸ் வன்முறை, அரசியல் செயல்பாட்டாளர்களில் நடத்தப்படும் எதிர்பாராத தாக்குதல், குற்றவாளி குழுக்கள், ஊழல் செய்த உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்படும் பழிவாங்கல்கள் என அனைத்தும் அடங்கும். 2019 ஆம் ஆண்டு தேர்தலில், பிரதமரின் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெற்றதிலிருந்து, இந்து தேசியவாத அரசாங்கத்தின் வழியில் நடக்க ஊடகங்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

 

இந்துத்துவா ஆதரவளர்வர்களை எரிச்சலூட்டும் விஷயங்களைப் பற்றி பேசவோ எழுதவோ துணிந்த பத்திரிகையார்கள் மீது, சமூகவலைதளங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் திகிலூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இதில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் கொல்லப்படவேண்டும் எனவும் அந்தப் பிரச்சாரங்களில் இடம்பெறுகிறது.


இவ்வாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்