Skip to main content

நிதி நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி கொள்ளை; சிசிடிவி வீடியோ காட்சிகள் மூலம் கைது!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

சென்னை மதுராந்தகத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பாலசுபரமணியன். இவர் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் நேரில் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்துடன் இரவு எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் திடீரென பாலசுப்ரமணியனை வழிமறித்து கத்தியால் வெட்டியது.

 

robbery

 

இதில் படுகாயம் அடைந்தவர் அலறியபடி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அக்கும்பல் பாலசுப்ரமணியனிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது.

 

வெட்டுப்பட்டு, படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழிப்பறியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

 

 

அதில் சினிமாவில் வருவது போல் பாலசுப்பிரமணியனை வழிமறித்த கொள்ளை கும்பல் அவரை தாக்கி, கத்தியால் வெட்டிய  காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்ததில் தர்மபுரியை சேர்ந்த சரவணன், மதுபாலா, கதிர்காமத்தை சேர்ந்த கந்தவேலு, ஐயங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அஜித், கல்மேடுபேட்டை சேர்ந்த சுதன் ஆகிய 5 பேர்தான் பாலசுப்பிரமணியனை தாக்கி பணப்பை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலிசார் சரவணன், மதுபாலா, கந்தவேலு, அஜித் ஆகிய 4 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் கூட்டாளியான கல்மேடுபேட் சுதனை தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் பணம்,  3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சார்ந்த செய்திகள்