இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். இந்த் நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
Published on 09/10/2019 | Edited on 09/10/2019