ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் நடக்கும் மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மறைவுக்கு ஐநா சபை, அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியாகிவருகின்றன.
அமெரிக்கப் படைகள் திரும்பிய பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளரான மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் தொடர்ச்சியாக செய்திகளைச் சேகரித்து வெளியிட்டுவந்தார். இந்நிலையில், ராணுவத்தினருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.
அவருடைய பூதவுடல் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. டேனிஷ் சித்திக்கின் மறைவுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும், சக செய்தியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்
உலக அளவில் புகைப்பட கலைஞருக்கான உச்சபட்ச விருதான 'புலிட்சர்' விருதை தனது 38வது வயதிலேயே பெற்றவர் டேனிஷ் சித்திக். மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் அனுபவித்த சோகம், முதல் கரோனா அலை நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்கள், அதேபோல் அண்மையில் கரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியபோது இருந்த சூழ்நிலைகள், அதற்கு முன்பாக சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற கலவரக் காட்சிகள், நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் என அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் இன்றுவரை அந்தத் துயரங்களின், மாறா வடுவின் வெளிப்பாடாக இருக்கின்றன.
மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் கையாளப்பட்ட முறை, அவர்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து அவர் எடுத்த புகைப்படங்களே அவருக்கு உலக விருதான 'புலிட்சர்' விருதைக் கொண்டுவந்து சேர்த்தது. இறுதிமுதல் தவிப்பு, சிலிர்ப்பு, சோகம், பதைபதைப்பு என அத்தனையையும் காமெராவில் சிறைப்படுத்திய அந்த அற்புத கலைஞனை இழந்து நிற்கிறது இந்த மண்.