கரோனா தொற்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அங்குதான் தினமும் அதிகபேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாக்பூரில் கடந்த சில நாட்களாக 1,500-க்கும் அதிகமான கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 21ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.