
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நேற்று நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 16 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சண்டையில் முக்கிய தீவிரவாதியான கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடந்த 100 மணி நேரத்தில் காஷ்மீரில் இருந்து முழுவதுமாக அழிக்கப்பட்டது என இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியா கெடரெருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றங்களை குறைக்க உதவுங்கள் என ஐ.நா சபைக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது படைகளை பயன்படுத்தும் என அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனால் இங்கு மோசமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை அவசர நிலையாக எடுத்து கொண்டு உடனடியாக உதவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.