தன்னைக் கற்பழித்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என உபி எம்.எல்.ஏ.வால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, பங்கர்மாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்கு சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. அதேபோல், இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்குழுவும் கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை வன்புணர்வு செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என அந்தப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அவர்களைக் கைது செய்துவிட்டு பின்னர் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். ஏன் அவர்களைக் காப்பாற்றவேண்டும்? அவர்களை சுதந்திரமாக விட்டால் என் அப்பாவைக் கொன்றதுபோலவே மாமாவையும் கொன்றுவிடுவார்கள்’ என அழுதுகொண்டே பேசிவிட்டு, மயங்கிவிழுந்தார்.
மயக்கம் தெளிந்த பின்னர் மீண்டும் பேசிய அவர், ‘சி.பி.ஐ. விசாரணை நேர்மையான முறையில் நடந்தால்தானே எனக்கு முறையான நீதி கிடைக்கும்? அப்படி நடக்கும் என்ற உறுதியை யார் தருவார்கள்?’ என கேள்வியெழுப்பினார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவர்களைக் கைது செய்யக்கோரி, உபி முதல்வர் யோகியின் வீட்டு முன்பு அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஏப்ரல் 5ஆம் தேதி காவல்துறையினரால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை ஏப்ரல் 10 அன்று சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.