இந்திய எல்லைப்பகுதியில் நிலவிவரும் சிக்கல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் ஜூன் 19 அன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்துவருவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில் ஜூன் 19 அன்று, இந்த பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி மாலை ஐந்து மணியளவில் காணொளிக்காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கியக் கட்சிகள் அனைத்திற்கும் பிரதமர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.