தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ அதன் புதிய உற்பத்தி ஆலையை 536 ஏக்கர் பரப்பளவில் ஆந்திராவில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமே கியா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் திறப்பு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு அதிகாரி மனோகர் பட் (Manohar Bhat) "நமது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எஸ்.பி.2 ரகம். இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். மேலும் கியா மோட்டார்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு புதிய மாடல் காரையும் அறிமுகம் செய்யும், கியா கார் விற்பனை வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 9 முதல் ரூ. 16 இலட்சம் வரை இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தற்போது அதன் உற்பத்தி ஆலை அருகே திறக்கபோவதாக அறிவித்துள்ளது.
புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் கூஹயூன் ஷிம், “தற்போதுவரை கியா நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத்தான் பயன்படுத்திவருகிறது. ஆனால் தற்போது அதனை தனியாகப் பிரித்து எங்களுக்கென தனியாக ஒரு ஆராய்ச்சி மற்றும் மேபாட்டு மையத்தை உருவாக்கப்போகிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ஆந்திர அரசுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.