பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அக்கட்சி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, அதனை பாஜக ஆளும் மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் மத்திய பாஜக தொடங்கியுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு பேசிய அக்கட்சித் தலைவர் நட்டா தெரிவித்திருந்தார். இந்நிலையில் எட்டாம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " மத்திய பாஜக அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு மக்களுக்காக நிறைவேற்றியுள்ளோம். இன்னும் நிறைய செய்ய உள்ளோம். இந்த எட்டு ஆண்டுகளில் என்னை ஒருமுறை கூட நான் பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும் போது மட்டுமே பிரதமர் என்ற பொறுப்பு தனக்கு இருப்பதாக நினைப்பேன். மற்றபடி எப்போதும் இந்திய மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காகவே என்னுடைய சிந்தனைகள் இருக்கும்" என்றார்.