ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு 09/09/2023 அன்று கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆந்திராவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
தொடர்ந்து அவரது உடல்நிலை உள்ளிட்ட மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடந்த விசாரணையில், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும், அவர் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 52 நாட்களுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்திருந்தார்.
இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது.
முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள், அனிருத்தா போஸ், பெலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த தீர்ப்பு இன்று (16-01-24) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (16-01-24) தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.