இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட ஐந்து பேர் பலியானதாக தற்போது சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. அதன்படி நாளை (20.02.2021) 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின் அந்தப் பக்கம் உள்ள, சீனப் பகுதியில் நடைபெறவுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.