மக்களவைத் தேர்தல் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (01-06-24) நடைபெற்றது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது.
இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு என்பது உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத், அனுராக் தாகூர் உட்பட 904 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் இன்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 7வது மற்றும் இறுதிக் கட்டமாக இன்றுடன் இந்திய நாடாளுமன்றத்திற்கான நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.