தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் சோவியத் புரட்சியாளர் லெனின் சிலை தகர்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அன்று இரவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலையை பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் சேதப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
I am shocked by the vandalism displayed by BJP workers in desecrating #PeriyarStatue . Why is the @BJP4India afraid of the revolutionary social reformer E.V.R. ?#Periyar gave the people exploited by caste system self respect. People will see through the BJP’s class bias.
— Siddaramaiah (@siddaramaiah) March 8, 2018
இந்நிலையில், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ‘பெரியாரின் சிலையை உடைத்த பா.ஜ.க.வினரின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஏன் பா.ஜ.க.வினர் புரட்சிகர சமூக சீர்த்திருத்தவாதி பெரியாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? சாதிமுறைகளால் அல்லலுற்ற பொதுமக்களுக்கு சுயமரியாதை வழங்கியவர் பெரியார். பா.ஜ.க.வின் வகுப்புவாத பிரிவினைகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.